Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, May 18, 2015

கருவுற்ற தாயை போல தியாகம்: ஆசிரியர்களுக்கு நீதிபதி பாராட்டு


""ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவனை தகுதியுள்ளவனாக மாற்ற கருவுற்ற தாயை போல், பல தியாகங்களை செய்கின்றனர்,'' என்று,  கல்வியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாசுகி பேசினார்.
கரூர், வேட்டமங்கலம் கல்வியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாசுகி பேசியதாவது:
கல்வி நிறுவனங்களில். கல்விக்கு மட்டுமின்றி ஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். பட்டம் பெறும் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அதை கல்வியின் உதவியுடன் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும். சமூகத்திற்கும், நாட்டுக்கும், உங்கள் வீட்டிற்கும் தொண்டு செய்ய வேண்டும். இதற்கான அனுமதி சீட்டுத்தான் நீங்கள் பெறும் இந்த பட்டம். ஒரு கருவுற்ற தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தையை பிரசவிக்கும் வரை, பல தியாகங்களை செய்வாள். அது போல, கல்வி நிறுவனமும், அதன் ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவர்களை தகுதி உடையவர்களாக மாற்றி அனுப்புவதற்காக பல்வேறு தியாகங்களை செய்கின்றனர்.
ஆசிரியர் பணி, விதையை விருட்சமாக்கும் பணி. ஒரு மாணவனை கல்வியாளனாக மட்டுமல்லாது நல்லவராகவும் மாற்றும் பணியை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். ஆசிரியர்கள், பள்ளியில் மட்டுமின்றி வெளியிலேயும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஒருவர் பேசும் சொல்லையும், செலவழிக்கும் நேரத்தையும் வாழ்வில் திரும்பப்பெற முடியாது. எனவே, நீங்கள் உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். அதற்கு உங்கள் கல்வியும், அனுபவமும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பி.எட்., மற்றும் எம்.எட்., முடித்த, 270 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை, நீதிபதி வாசுகி வழங்கினார்.