சென்னை:மூன்று தமிழறிஞர்களின் நுால்கள், 25 லட்சம் ரூபாயில், நாட்டுடமை ஆக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர், விஜயராகவன் கூறியதாவது:
தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் அமைச்சர், மு.தமிழ்க்குடிமகன், தமிழில், &'வழிபாடு, தமிழ் ஆட்சி மொழி சொல்லாக்கம், மானுடப் பிரவாகம்&' உள்ளிட்ட, 26 நுால்களை எழுதியுள்ளார். இவற்றை, மக்களிடம் சேர்க்கும் வகையில், நாட்டுடமை ஆக்கும்படி, அவரின் மனைவி, வெற்றிச்செல்வி கடிதம் எழுதி இருந்தார்.
அதே போல, எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின், 37 நுால்களையும் நாட்டுடமையாக்க, அவரின் மகன் வெண்மணிச்செல்வனும், எழுத்தாளர், பொன்.சவுரிராஜனின், 27 நுால்களை நாட்டுடமையாக்க, அவரின் குடும்பத்தாரும் கோரிக்கை விடுத்தனர்.நுால்களின் தரம், மக்களுக்கு ஏற்படுத்திய தாக்கம், இலக்கிய பயன்பாடு ஆகியவற்றை ஆராய்ந்து, தமிழ்க்குடிமகன் மற்றும் மேலாண்மை பொன்னுசாமியின் நுால்களுக்கு, தலா, 11 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
பொன்.சவுரிராஜனின் நுால்களுக்கு, 3 லட்சம் ருபாய் என, மொத்தம், 25 லட்சம் ரூபாய், அவர்களின் வாரிசுகளுக்கு பரிவுத்தொகையாக வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.