பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை
அதிகரிக்க 27 ஆயிரம் முதுகலை
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி:
மாநில கல்வியியல் ஆராய்ச்சி
நிறுவனம் ஏற்பாடு.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர
முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியின் தரத்தை
உயர்த்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும்
பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி
வருகிறது. இதற்காக முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக
பாடவாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த
ஆண்டும் அப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில
அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி
ஆகஸ்டு 17 (இன்று) முதல் 23-ம் தேதி வரை
ஈரோடு, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில்
நடைபெற உள்ளது.இதில், தமிழ், ஆங்கிலம்,
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல், கணினி அறிவியல், வரலாறு,
பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு
மாவட்டத்துக்கு தலா 3 பேர் வீதமும்,
வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 2
பாடங்களுக்கும் சேர்த்து 3 பேர் என்ற வீதமும்
கலந்துகொள்வர். முதன்மை கருத்தாளர்
பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பின்னர்
மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி
அளிப்பார்கள். இவ்வாறு 27 ஆயிரம் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி
அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.