தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் கடும்
எதிர்ப்பை அடுத்து,இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிப்பை, வாபஸ்
பெறுவதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சமீபத்தில் பொது
பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, 'தொழிலாளர்கள்
ஓய்வு பெறும்போது, திரும்பப்பெறும் இ.பி.எப்.,
தொகையில், 60 சதவீதத்துக்கான வட்டி மீது வரி
விதிக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு
தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தன.
இதையடுத்து, 'ஓய்வூதியத் திட்டத்தில்,
தொழிலாளர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் நோக்கில்,
இ.பி.எப்., நிதியில், 60 சதவீதத்துக்கான வட்டி மீது வரி
விதிக்கப்படுகிறது' என, மத்திய அரசு விளக்கம்
அளித்தது. அந்த பதிலில்திருப்தி அடையாத
தொழிற்சங்கங்கள், வரிவிதிப்பை வாபஸ் பெறும்படி,
தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அவற்றை சமாதானம் செய்யும் முயற்சியாக,
பார்லிமென்டில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கையில்,
இ.பி.எப்., மீதான வரிவிதிப்பு குறித்து பதில் அளிப்பதாக,
அருண் ஜெட்லி கூறியிருந்தார். இந்நிலையில்,
லோக்சபாவில் நேற்று, நிதியமைச்சர் அருண் ஜெட்லி,
தானாக முன்வந்து வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
இ.பி.எப்., வட்டி மீதான வரிவிதிப்பு தொடர்பாக,
பல்வேறு தரப்பினர், கருத்துக்களை
அரசிடம்தெரிவித்தனர். அதையடுத்து, வரிவிதிப்பு
தொடர்பாக, விரிவான ஆய்வு நடத்த, அரசு
விரும்புகிறது. எனவே, இ.பி.எப்., வட்டி மீதான
வரிவிதிப்பை, மத்திய அரசு திரும்பப் பெற்றுக்
கொள்கிறது. என்.பி.எஸ்., எனப்படும், தேசிய
ஓய்வூதியத் திட்டத்தில், பணம் திரும்பப்
பெறப்படும்போது, 40 சதவீதத்துக்கு வரி விலக்கு
அளிக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த
வரிவிலக்கு தொடர்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சாமானியனுக்கு வெற்றி! மேற்கு வங்க முதல்வரும்,
திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி
வெளியிட்ட அறிக்கையில், 'இ.பி.எப்., மீதான வரிவிதிப்பு
வாபஸ் பெற்றது, சாமானியருக்கு கிடைத்த வெற்றி.
இந்த விவகாரத்தை முதலில் எழுப்பியதற்கு
பெருமைப்படுகிறேன்' என, கூறியுள்ளார்