தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்
1 தேர்வில் பொது இயந்திரவியல் பாடத்தில் 60
மதிப்பெண்களுக்கு வினாக்கள் இன்றி மாணவர்கள்
திண்டாடினர்.
தேனி மாவட்டத்தில் தேனி, போடி, சின்னமனூர்,
ஆண்டிபட்டியில் நான்கு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில்
பொது இயந்திரவியல் பாடப்பிரிவு உள்ளது. நேற்று
மதியம் இப்பாடத்திற்கான தேர்வு நடந்தது. இதில்
மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு பதிலாக, 140
மதிப்பெண்களுக்கு மட்டுமே வினா கேட்கப்பட்டிருந்தது.
வினாத்தாளை படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
60 மதிப்பெண்களுக்கு கேள்வி இல்லை
விரிவான விடையளி என்ற ஈபிரிவில் தலா 20
மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு
நான்கு வினாக்கள் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால்
வினாத்தாளில் அப்பிரிவில் ஒரே ஒரு வினா மட்டும்
இருந்தது. மீதி 60 மதிப்பெண்களுக்கான மூன்று
வினாக்கள் இல்லை. இதனால் மாணவர்கள் குழப்பம்
அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அரை
மணிநேரத்திற்கு பின் மூன்று வினாக்களை வகுப்பு
ஆசிரியர்களே வழங்கி தேர்வு எழுத வைத்தனர்.
குளறுபடி ஏன்
பிளஸ் 1 தேர்வு வினாத்தாள்கள் வெளிமாவட்ட ஆசிரியர்
குழுவால் தயார் செய்து, பிரின்ட் செய்கின்றனர். அதனை
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் முறையாக சரிபார்க்காததால் 3
வினாக்கள் பிரின்ட் ஆகாமலே அரைகுறையாக
முடிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர் கல்யாண
சுந்தரம் கூறுகையில், மூன்று ஆண்டுகளாக பிளஸ்
1 தேர்விற்கான வினாத்தாள் வெளிமாவட்டத்தில்
தயாரித்து, பிரின்ட் செய்து அனுப்புகின்றனர். தேர்வு
மையத்தில் பிரித்து பார்த்த போதுதான் வினாக்கள் இடம்
பெறாதது தெரிய வந்தது. உடனே 15 நிமிடத்தில் 3
வினாக்கள் தயார் செய்து பள்ளிகளுக்கு தெரிவித்து
விட்டோம். அதை வைத்து மாணவர்கள் தேர்வு
எழுதினர். இதனால் எந்த பிரச்னையும் இல்லை, என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் வாசுவை அலைபேசியில் பலமுறை தொடர்பு
கொள்ள முயன்றும் முடியவில்லை. அவர் தொடர்பு
எல்லைக்கு வெளியே உள்ளதாக பதில் வந்தது.