Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, February 17, 2016

தீவிரமடையும் அரசு ஊழியர்கள் போராட்டம்: சென்னை எழிலகம் முன்பு 2-வது நாளாக சாலை மறியல்; போலீசாருடன் தள்ளுமுள்ளு; 500 பேர் கைது

சென்னை எழிலகம் முன்பு 2-வது நாளாக சாலை
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 500 பேர் கைது
செய்யப்பட்டனர்.
7-வது நாளாக போராட்டம்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலி
பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 20
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கத்தினர் கடந்த 10-ந்தேதி முதல்
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
7-வது நாளான நேற்று சென்னை எழிலகம் அலுவலக
வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும்
அவர்களுக்கு ஆதரவாக உள்ள அரசு ஊழியர் சங்கங்களை
சேர்ந்த நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் தங்கள்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு
எழிலக வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில்
தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்று
எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் தங்கள் கோரிக்கைகள்
தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாததால்
அதிருப்தியுடன் அரசு ஊழியர்கள் அனைவரும் தலைமை
செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
தகவலறிந்த போலீசார் பாதுகாப்பு கருதி எழிலகத்தின்
அனைத்து நுழைவுவாயில்களையும் மூடினார்கள்.
இருப்பினும் தடையை மீறி அரசு ஊழியர்கள் வெளியே
செல்ல முயன்றனர். அப்போது அரசு ஊழியர்களுக்கும்,
போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில்
அரசு ஊழியர்கள் சிலர் கீழே விழுந்தனர்.
500 பேர் கைது
எழிலக வளாகத்தின் பின்பக்கமாக வெளியேறிய அரசு
ஊழியர்கள் சுவாமி சிவானந்தா சாலையில் அமர்ந்து 2-
வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த
வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 500-க்கும்
மேற்பட்டோரை போலீசார் கைது செய்து ஆயிரம் விளக்கு
பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். மீண்டும்
தொடர்ந்து போராட திட்டமிட்டிருப்பதால் அரசு ஊழியர்கள்
போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட
தள்ளு முள்ளு போராட்டத்தில் எழும்பூர்
அருங்காட்சியகத்தில் காட்சிக்கூட காவலராக பணியாற்றி
வரும் விஜயலட்சுமி என்ற அரசு ஊழியர், போலீசார் தகாத
வார்த்தையால் திட்டி தன்னுடைய சேலையை பிடித்து
இழுத்ததாக பரபரப்பான குற்றச்சாட்டினை தெரிவித்தார்.
போராட்டம் தொடரும்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில
செயலாளர்கள் அன்பரசன், ஆ.செல்வம் ஆகியோர்
கூறுகையில், இடைக்கால பட்ஜெட்டில் எங்களது
கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
என்று எதிர்பார்த்தோம். அறிவிப்புகள் இல்லாததால்
எங்களுக்கு ஏமாற்றமும், அதிருப்தியும் மட்டுமே
மிஞ்சியுள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டத்தின்
காரணமாக அரசு பணிகள், தேர்தல் பணிகள் பாதிப்பு
அடைந்துள்ளது. காலவரையற்ற போராட்டத்துக்கு
தோழமை அமைப்புகளிடம் இருந்து ஆதரவுகள் பெருகி
வருகின்றன. ஆகையால் எங்களுடைய போராட்டம் மேலும்
விரிவடையும். தமிழ்நாடு முழுவதும் எழுச்சிக்கரமான
போராட்டம் தொடரும் என்றனர்.