நாடு முழுவதும் 581 மையங்களில் இன்று நடக்கும் ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வினை, 1.37 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான சேர்க்கைக்கு, ஆன் லைன் மூலம் மே மாதம் 4ம் தேதி வரை விண்ணப்ப பதிவு வரவேற்கப் பட்டது.நாடு முழுவதுமிருந்து 1 லட்சத்து 37 ஆயிரத்து 438 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு இன்று (7ம் தேதி), காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, 75 நகரங்களில் அமைக்கப்பட்ட 581 தேர்வு மையங்களில் நடக்கிறது.ஜிப்மர் நுழைவுத் தேர்வில், மொத்தம் 200 வினாக்கள் கொள்குறி வகையில், இயற்பியல் 60, வேதியியல் 60, உயிரியல் 60, ஆங்கிலம் 10, ரீசனிங் 10 என்ற எண்ணிக்கையில் கேள்விகள் இடம் பெறுகின்றன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.காலை 9:15 மணிக்கு தேர்வு அறை மூடப்படும் என்பதால், கால தாமதத்தை தவிர்க்க காலை 7.30 மணிக்குள் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 150 இடங்களில், புதுச்சேரி மாணவர்களுக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை, பொதுப்பிரிவு 23, ஓ.பி.சி., 11, எஸ்.சி., 6 என்ற இட ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்பட உள்ளது. இந்த 40 இடங்களுக்கு இந்தாண்டு 2,510 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.