கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா வேலம்பட்டி பஞ்சாயத்தில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், பங்கேற்று கரூர் கலெக்டர் ஜெயந்தி பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, 157 பஞ்சாயத்துக்களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம், தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி அதன் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் பொதுமக்களிடம் ஆதார் எண், மொபைல்ஃபோன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தவர்கள் குறித்து பதிவு செய்து உறுதிப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பஞ்சாயத்துக்கள் அளவில் உள்ள பொதுமக்கள், சிறப்பு கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று, அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், தங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒரு வாக்காளர் கூட விடுபடாமல் பெயர் பதிவு குறித்த விவரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார். நிகழ்ச்சியில், பஞ்சாயத்து உதவி இயக்குனர் விஜயலட்சுமி, வேலம்பாடி பஞ்சாயத்து தலைவர் சிவகாமி, தாசில்தார் உதயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.