Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, December 24, 2016

என்ன சாதித்துவிட்டார் பெரியார்?



அடையாளங்கள், மனித உருவை கட்டமைக்கிறது. ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு அடையாளத்தை விரும்புகிறார்.. கடந்த கால தவறுகளில் பாடம்படித்தே, நிகழ்கால அடையாளத்திற்குள் நுழைகிறோம். ஒவ்வொரு நல்ல அடையாளத்திற்கு பின்னும், பல வலிகள் இருக்கும். மாற்றம் என்பது சிறு தீப்பொறியில் பற்றிகொள்ளும் தீ பிழம்பாக இருந்துவிடுவதில்லை. அது கடலை கடப்பது போல, வானை வளைப்பது போன்ற பெரும் காரியம். ஆனால் மாற்றத்திற்கான பெரு முயற்சிக்கான உந்துதல் பல சமயம் சிறு தீப்பொறியின் பற்ற வைத்தலில் நிகழ்ந்துவிடுகிறது. ‘பெரியார்’ - அப்படியொரு தீப்பொறியாக என்னைப்பற்றிக்கொண்டு, மிக மோசமான எனது கடந்தகாலத்தில் இருந்து, என் உயிரைக்காத்து, ‘பத்திரிகையாளர்’ என்ற நல்ல அடையாளத்திற்குள் நிறுத்தினார்.
இக்கட்டுரையின் வாயிலாக ஒரு பத்திரிகையாளனின் சொந்த அனுபவங்களிலிருந்து பெரியாரை உணரலாம்.
மது பழக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை துல்லியமான கணக்கில்லை என்றாலும் அதனால் ஆண்டுக்கு சுமார் ஒன்னரை லட்சம் பேர்கள் இறக்கின்றனர். விபத்துகளில் பலியாவோர்களில் 40% பேர்கள் மது அருந்தியதால் உயிரிழக்கின்றனர். மறுபக்கம் தமிழ்நாட்டில் மட்டும் 6,823 அரசு மதுக்கடைகள் உள்ளன. ஆண்டுக்கு ரூபாய் 26,000 கோடி மது விற்பனையாகிறது. உலகில் சுமார் 140 மில்லியன் தீவிர குடி நோயாளிகள் இருக்கிறார்கள். 60% தற்கொலைகள் குடிப்பதால் எற்படுக்கிறது என உலக சுகாதார மையம் புள்ளிவிவரம் சொல்கிறது. இத்தனை புள்ளிவிவரங்களும் ஏன் என்றால், 140 மில்லியன் குடி நோயாளியில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதற்காகவே.
கீழ் நடுத்தர வர்கத்தை சார்ந்த விவசாய பின்னணி கொண்ட, மெக்கானிக் மகன் நான். கல்வி மட்டுமே வாழ்வில் உயர்த்தும் என்ற பெற்றோர்களின் உறுதியான நம்பிக்கையால், சிறு வயதிலேயே கண்டிப்புடன் கல்வியை போதித்தனர். யூ.கே.ஜியிலேயே அம்பது திருக்குறள் ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றுருந்தேன் என்பார்கள். இதுவே எனது மழலை மகிழ்ச்சியை பறித்தது. உறவுகள் சூழ் விழாக்களில் ஏனைய பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்க, நானோ வந்திருக்கும் உறவினர்கள் முன் செய்யுள்களை ஒப்புவித்து கைதட்டல்களை பெற்றுக்கொண்டிருப்பேன். அந்த கரவொலி, பெற்றோர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுக்கும். எனக்கோ, எனது விளையாட்டு குணங்களின் மீது விழுந்த பேரிடியாக இருக்கும். ஒரு பொம்மலாட்டக்காரர் கைப்பிடியில் இருக்கும் பொம்மையைப்போலதான் எனது ஆட்டமும். ஆட்டத்திற்கு சொந்தக்காரன் நான் என்றாலும் என்னை ஆட்டுவித்தது வேறொருவரே. எனவே கூண்டை விரும்பாத பறவையாக, சுதந்திரம் நோக்கி பறக்க எத்தனித்தேன். நட்சத்திரங்களாய் எக்கச்சக்க நண்பர்கள்.
‘உலகில் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் அடிப்படையில் மனிதன் நேசிக்கப்படாமல் போவதே’ என்பார் ருசிய எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கி. உண்மைதான் அதீத கண்டிப்பும், கண்காணிப்புமே சிறைகளை தகர்க்கும் சிந்தனையை உருவாக்குகிறது. எதிர்பாலினத்தின் கவனத்தை பெற துடிக்கும் டீன் பருவம், ஆனால் ஒல்லியான தேகம், குறைந்த உயரம் உருவாக்கிய தாழ்வு மனப்பான்மை ‘கோல்டன் ஈகிள்’ நோக்கி தள்ளியது. ‘பீர்’ அடித்தால் குண்டாகலாம் என சொல்லப்படும் நண்பர்களின் குருட்டு நம்பிக்கைக்கு நானும் பலியானேன். ஆள் அரவமற்ற ஓர் முட்டுசந்தில் ஒரேயொரு மூடிதான் குடித்திருப்பேன். உலகமே சுற்றுவது போல கிர்ரென்று இருந்தது. அதற்கே உளறினேன். நான் உளறியது இன்றும் நினைவிருக்கிறது. ‘ஏண்டா இந்த அப்பா...க்களெல்லாம் இப்படியிருக்காங்க?’ என்பதுதான். நாளடைவில் ஹாட் ட்ரிங்க்ஸ் குடிக்கும் ஆர்வத்தை தூண்டியது. ரம், பிராந்தி, விஸ்கி என்று அதன் வகைகள் அனைத்தும் சுவைத்து பார்த்து, குடித்து மூழ்கினேன். வாடை தெரியாத உயர் ரக சரக்கென்று ஜின், வோட்கா அடிப்பதில் அப்படியொரு அலாதி சுகம். பணமிருந்தால் ஸ்டார் ஹோட்டல் பார். வெள்ளரி பழங்களும், சிக்கன் பீஸ்களும் சைடிசாக கலந்து குடிப்பதும், போதிய பணமில்லையேல் ரெயில் தண்டவாள முள்ளு காட்டில் அமர்ந்து அடிப்பதும் வாடிக்கை. நான்கு புரோட்டாவை பிச்சு போட்டு, அதில் கார சால்னாவை ஊற்றி, குளப்பி, வாழைப்பழத்தை உறித்து சரக்கில் தொட்டு ஒரு கடி கடித்துவிட்டு, மெல்ல ஒரு சிப் இழுத்துவிட்டு, பரோட்டாவை பிசைந்து சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம் என்று இதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன்.
இயல்பிலேயே இதயம், பூவே உனக்காக, காதல் மன்னன், காதலுக்கு மரியாதை பார்த்து வளர்ந்த என்னை, டீன் பருவ ஹார்மோன்கள் காதலில் கொண்டு சேர்த்தது. காதல் கைகூடி, மண்ணிலேயே வானவில் குழைத்து விளையாடி, இருவீட்டுக்கும் தெரிந்து, சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டு மீண்டும் குடியில் ஐக்கியமானேன். என் தங்கை பெரிய பெண் ஆனதால் எனது பாட்டி ஆசையாக வாங்கி வைத்த பித்தளை குடம் தொலைந்துவிட்டது. ‘டேய் நீ தான் பெரிய பத்திரிகைக்காரன் ஆகிட்டியே!, அந்த குடத்தை கண்டுபிடிச்சு கொடுடா’ என்பார் இப்போதுவரையும். ‘எப்படியம்மா திருடனே போலீசாக முடியும்’? ஆம், அம்மா இந்த கட்டுரையின் வாயிலாகத்தான் நீ அந்த உண்மையை அறிந்துக்கொள்வாய். அந்த குடத்தை யாருக்கும் தெரியாமல், வெள்ளை சாக்கில் மறைத்து கொண்டு சென்று 85 ரூபாய்க்கு வித்து குடித்தது சாட்சாத் உன் மகனேதான். மன்னிப்பாயாக. போதை பாக்கு போடவும் பழகிக்கொண்டேன்.
கலை கல்லூரியில் நண்பன் சேர்மன் ஆன வெற்றிக்கு குடித்த குடியில் சாக்கடையில் விழுந்து கிடந்ததாக நண்பர்கள் கூறினார்கள். வீட்டில் வாந்தி, ரோட்டில் வாந்தி, எங்கும் வாந்தி. ‘நம்ம வம்சமே குடிச்சு அழிஞ்சது. அதனாலேயே உங்கப்பா குடி பழக்கமில்லாம கட்டுகோப்பா இருந்தாரு. ஆனா நீ குடிக்க ஆரம்பிச்சிட்டியே’ என அம்மா அழாத நாளில்லை. அடிக்காத நாளில்லை. நான் திருந்தவேண்டும் என போகாத கோயில்லை, வேண்டாத சாமியில்லை. குடியை நிறுத்த அய்யனாரிடம் வேண்டிக்கொண்டு, நான் அடிக்கடி மொட்டை போட்டுக்கொண்டேன். ‘மூணு கண்ணன் வரான்’ என்று குழந்தைக்கு சோறூட்டுவதைப் போல, ‘பிஞ்சில பழுத்தவராம். உங்ககூட சேரக்கூடாதாம்’ என உறவுகளின் பிஞ்சு குழந்தைகள் சொல்லிவிட்டு என்னைவிட்டு ஒதுங்குவார்கள். பிஞ்சு உதடுகள் உதிர்த்த வார்த்தைகள், அமிலமாய் நெஞ்சை அரிக்கும். சமூக ஒதுக்குதல், காதல் தோல்வி இரண்டிலிருந்தும் விடுபட தற்கொலை முடிவுக்கு வந்தேன். வானமே எல்லை படம் போல கல்லூரி இறுதியாண்டில் தற்கொலை செய்துக்கொ(ல்ல)ள்ள வேண்டும் என நாள் குறித்துக்கொண்டு ஒவ்வொரு நாட்களாக எண்ணி வந்தேன். புறக்கணிப்பை விட மோசமான தண்டனை வேறெதுவுமில்லை. சமூக புறக்கணிப்பு என்னை தற்கொலை எண்ணத்தையும் துரிதப்படுத்தியது.
அப்போதுதான் ஓர்நாள் தற்செயலாக தேநீர் கடையில் அந்த நாளிதழைப் படித்தேன். ‘மனித மலத்தையும், மாட்டு சாணத்தையும் அள்ளி முகத்தில் வீசுகின்றனர். அதை ஒரு கையால் துடைத்துக்கொண்டே ‘சாதி ஒழியனும் சூத்திரப்பட்டம் ஒழியனும்’ என்ற செய்தியைப்படித்தேன். ‘யார்ரா இது? மத்தவங்களுக்காக இந்த மனுஷன் ஏன் இவ்வளவு அசிங்கப்படனும்?’ என ஆர்வத்தை கிளறிய அந்த பெரியவர் ‘பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார்’. அந்த நாளிதழ் விடுதலை. சிறுவயதிலேயே பெரியார் அறிமுகம் இருந்தாலும் ஒரு தத்துவமாக உணர தொடங்கியது அப்போதுதான். நூலகம் நோக்கி பயணித்து, அவர் நூல்களைப் படித்தேன். நமக்காக வாழும் அப்பா, அம்மா, உறவினர்கள், சுற்றியுள்ளவர்களையே பார்த்து வந்த எனக்கு, பிறருக்காக வாழும் பெரியார் பிரமாண்டமாக தெரிந்தார். வாழ்க்கையில் எல்லோரும் ஓடுவது பணத்திற்காகத்தான் ஆனால் மிக பெரிய செல்வந்தர், அனைத்து சொத்துகளையும் மக்களுக்காக ட்ரஸ்ட் ஆக்கிவிட்டு, சாதாரண வேனில் பயணித்து இப்படியொரு கஷ்ட வாழ்க்கை வாழ வேண்டுமா? என யோசித்த போது அவரின் பிரமாண்டம் மலையைவிட உயர்ந்தது. ’ஒரு செருப்பை மட்டும் வச்சுகிட்டு நான் என்ன செய்ய? எனும்போது மறு செருப்பையும் அவர் மீது தூக்கி வீசியடிக்க, இரண்டையும் எடுத்துக்கொண்டு அடுத்த கூட்டத்தில் விற்பதும், அதே நேரத்தில் அச்சிறு காசையும் மக்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை கண்டு வேடிக்கையான அவரின் குறும்பு ஈர்த்தது. ’எலிகளின் விடுதலையை பூனைகள் பெற்று தராது. எலிகள் போராட வேண்டும்’ என்ற அவரின் பார்வையே ஆணும்-பெண்ணும் சமம் என்ற உண்மையை உணர்த்தியது. ‘நான் சிறு வயதில் மீசை ஒட்டிக்கொண்டு குச்சிக்காரி வீட்டிற்கு பயணித்திருக்கிறேன். நிறைய புகை பிடித்துள்ளேன். பொய் பேசியுள்ளேன். ஆனால் பொது வாழ்க்கை வந்தபின் நேர்மை தவறியதில்லை’ என்ற அவரின் பேச்சை படித்தபின்னே ‘எல்லா தலைவர்கள் கடந்தகாலமும் பல தவறுகளை கடந்தே பயணித்துள்ளது’ என்ற யதார்த்தம் உணர்ந்தேன். ஓய்வெடுக்க வேண்டிய 94 வயதிலும், ஓய்வில்லாமல் மூத்திர சட்டியை கையில் ஏந்திக்கொண்டு சாதி ஒழிப்புக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடியது கண்டு மெய்சிலிர்த்தேன் இந்த வயதிலும் மக்களுக்காக உழைக்கும் அவரெங்கே, கோழைப்போல என் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த நான் எங்கே? வெட்கமாக இருந்தது. சுயநலத்திற்காக மரணிப்பது கேவலமானது. பொது நலனுக்கான மரணம் மகத்தானது என உணர்ந்தேன். அதுதான் 2013 ல் பெரியார் பிறந்தநாள் செப் 17 அன்று, என்னை சேலம் அரசு மருத்துவமனை உயர்திரு டீன் கார்த்திகேயன் முன்னிலையில் உடல்தானம் செய்ய வைத்தது. மண்ணுக்கு போகும் உடல் மருத்துவரின் ஆராய்ச்சிக்கு போகட்டுமே.
நான் ஒதுக்கப்பட்டபோது ஆதரவு கொடுத்து சமூக அறிவை ஊட்டிய திராவிடர் கழக, கம்யூனிச, புரட்சிகர, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் போல ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் நோக்கி பயணித்து சமூக கல்வியை போதித்தேன்.
மறுபக்கம் குடிகாரன் சொன்னா யார்தான் ஏற்பார்கள்? யோசித்தேன். முதலில் ஒரு வேலை குடிப்பதை நிறுத்துவதே ஒரு யுகம் கழிப்பதாக இருந்தது. பிறகு ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் இறுதியாக ஆறு மாதம் என நிறுத்திய நான், இறுதியில் நிரந்தரமாக குடி மற்றும் பாக்கு போதை பழக்கத்தை நிறுத்தினேன். தொடக்கத்தில் மது நினைவு வரும் நேரம் பல்லைக்கடித்துக்கொண்டு ‘நான் சேவை செய்த ஏழை பகுதிகளை நினைத்துப்பார்ப்பேன். அவர்களின் வறுமையும், அதை போக்க புகட்ட வேண்டிய உரிமைக்கான அரசியலும் கண்முன் நிற்கும். போதை நினைவு மங்க தொடங்கிவிடும். இத்தோடு பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது மதுவை நிறுத்தி. இடையில் எத்தனையோ முறை நண்பர்களுக்காக, புலனாய்வு செய்திக்காக, மதுக்கடை சென்றுள்ளேன். ஊற்றிக்கூட கொடுத்துள்ளேன். எந்த நெடியும் என்னை தீண்டியதில்லை. ‘பகுத்தறிவு’ வாசத்திற்கு முன் இந்நெடி எம்மாத்திரம்.
அரசியலும், எழுத்தும் புலனாய்வு பத்திரிகைகளில் மேடை அமைத்துக்கொடுத்தது. 12 ஆண்டுகள் கடந்து பயணிக்கிறேன். முதன் முதலில் எனது செய்தியின் அம்பலப்படுத்தலால் இன்றுவரை ‘ஆனந்தமாக’ நீதிமன்றம் சென்று வருகிறார் பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்துள்ள தொலைகாட்சி புகழ் சாமியார். எமது செயல்பாட்டுக்கு ஓர் சாட்சி. பால்ய கால இனக்கவர்ச்சியின் பிரிவுக்கு கலங்கிய என்னை, நிகழ்காலத்தில், இயல்பான காதல் ஈர்த்து, அது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணத்திலும் முடிந்து, நாங்கள் நல்ல இணையர்களாக கொள்கை பயணத்தில் இணைந்து பயணிக்கிறோம்.
சமூக சூழலினால் ஏற்பட்ட எனது பழக்கங்களை நல்ல மனநல மருத்துவரைப் போல் அணுகி தீர்க்காமல் ஒதுக்கியது சாதியும், சுற்றமும்.
சக மனிதன் மீதான அக்கறை, ஒருங்கிணைந்த வளர்ச்சியே சமூக வளர்ச்சி என அனைவருக்குமான அர்ப்பணிப்பு கொண்ட பெரியாரியமே காலம் கடந்தும் ஒருவனை பாதிப்பிலிருந்து மீட்டது.
எந்த குற்றத்திற்கும் ஒதுக்கித்தள்ளும் தண்டனை சரியல்ல. அன்போடு அணைத்து பார். அகிலத்தின் பிரிவினை எல்லைக்கோடுகளும் அழியும். ஆதியில் கள்ளுண்ணாமை மூலம் மது ஒழிப்பை வலியுறுத்தினார் அய்யன் திருவள்ளுவன். காந்தி கூறினார் என்பதற்காகவே தாதம்பட்டியில் உள்ள தனது சொந்த நிலத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டித்தள்ளினார் அய்யா பெரியார். அவரின் போராட்டமே மது போதை பழக்கத்திலிருந்த என்னையும் மீட்டது.
மதுவின் மூலம் வரும் ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமானத்தை எதிர்பார்த்து அரசு பணிகளை துரித்தப்படுத்துகிறது. மது விற்பனை உயர வேண்டுமென்றால் மது குடிநோயாளிகள் பெருக வேண்டும் என்ற அரசு எதிர்பார்கிறது போல.
கள்ளுக்கெதிரான முதல் போராட்டப்பொறி பெரியார். அப்பொறியில் நமது தீப்பந்தங்களை பற்றிக்கொள்வோம். குடியில்லா சமூகம் படைக்க- இதோ அந்த எரிமலை பந்தம் கொண்டே எனது அனுபவங்களை இங்கே பற்ற வைத்துள்ளேன். பற்றி எரியட்டும் பெரியார் தீ!
சே.த.இளங்கோவன்