சென்னை போலீசார் மற்றும் ஒரு தொண்டு
நிறுவனம் இணைந்து 8 திருநங்கைகளுக்கு தனியார்
நிறுவனங்களிலும், வங்கிகளிலும் வேலை வாங்கி
கொடுத்துள்ளனர். 3 திருநங்கைகள் சுயமாக தொழில்
தொடங்க ரூ.3 லட்சம் வரை கடன்
வழங்கப்பட்டது. திருநங்கைகளுக்கு வேலைசென்னை
மாநகர போலீஸ் மற்றும் ‘பாரதி பவுண்டேஷன்’ என்ற
தொண்டு நிறுவனம் சார்பில் சென்னையில்
திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கடந்த
மாதம் நடத்தப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை ‘பாரதி
பவுண்டேஷன்’ தலைவரும், நடன கலைஞருமான
ஷோபனா ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் 300-க்கும்
மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்களில் 8 பேர்
முதல்கட்டமாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 3
திருநங்கைகள் சுயமாக தொழில் தொடங்க ரூ.2 லட்சம்
முதல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்க தமிழ்நாடு தொழில்
வணிக கழகம் மூலமும் ஏற்பாடு
செய்யப்பட்டது.ஆணைகள் வழங்கப்பட்டது8
திருநங்கைகளுக்கு வேலைக்கான ஆணை, சுயதொழில்
தொடங்கும் திருநங்கைகளுக்கு கடன் தொகைக்கான
ஆணை வழங்கும் விழா நேற்று எழும்பூரில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மூத்த வக்கீல் ஆர்.காந்தி, ‘பாரதி
பவுண்டேஷன்’ தலைவர் ஷோபனா ரமேஷ், செயலாளர்
சாந்தி வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 8
திருநங்கைகளுக்கு பணி ஆணைகளும், 3 பேருக்கு கடன்
தொகைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சுஜாதா
என்ற திருநங்கைக்கு சமையல் தொழில் செய்வதற்காக
ரூ.3 லட்சம் கடனும், பவித்ரா என்ற திருநங்கைக்கு நகை
செய்யும் தொழிலுக்காகவும், பேன்சி கடை வைப்பதற்
காகவும் ரூ.2 லட்சம் கடனும் வழங்கப்பட்டது.
கோவையை சேர்ந்த பி.பி.ஏ. பட்டதாரியான ரேணுகாஸ்ரீ
என்ற திருநங்கைக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை
வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டது. லக்ஷயா
என்பவருக்கு நடனம் சம்பந்தப்பட்ட வேலையும்,
சைதாப்பேட்டையை சேர்ந்த கிரிஜாவுக்கு தனியார்
நிறுவனத்தில் குமாஸ்தா வேலையும் வழங்கப்பட்டது.
பி.காம். பட்டதாரியான சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த
லவுலிஜாய்க்கு தனியார் நிறுவனத்திலும், எம்.சி.ஏ.
பட்டதாரி ரக்ஷனாவுக்கு ஒரு கம்ப்யூட்டர்
நிறுவனத்திலும், பூர்மாதேவிக்கு தனியார் வங்கியிலும்
வேலைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. போலீசாருக்கு
நன்றிவேலை கிடைத்ததில் திருநங்கைகள் அனைவரும்
மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை போலீசாருக்கும், தொண்டு
நிறுவன அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக்
கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட
மற்ற திருநங்கைகளுக்கும் விரைவில் வேலைக்கான
ஏற்பாடு செய்யப்படும் என்று விழாவில்
அறிவிக்கப்பட்டது. விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர்
டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள்
கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை
அறிவிக்கப்பட்டதால் போலீஸ் அதிகாரிகள் யாரும்
பங்கேற்கவில்லை.