ஐதராபாத்,தெலுங்கானாவில் பள்ளிகளில் ரூ. 4 லட்சம்
வரையில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக அரசியல்
கட்சிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து நடவடிக்கை
எடுப்பதாக தெலுங்கானா அரசு உறுதி அளித்து
உள்ளது. தெலுங்கானா சட்டமன்றத்தில் பாரதீய ஜனதா,
தெலுங்கு தேசம் மற்றும் எம்.ஐ.எம். ஆகிய கட்சிகள்
கல்வித்துறையில் அதிகமான கட்டணம் மற்றும்
விரும்பத்தகாத நடைமுறைகள் தொடர்பாக தங்களது
கவலையை எழுப்பின. இதனையடுத்து இவ்விவகாரம்
தொடர்பாக சரியான நடவடிக்கையை எடுப்பதாக மாநில
அரசு உத்தரவாதம் அளித்து உள்ளது. தெலுங்கானா
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பாரதீய
ஜனதா உறுப்பினர் கே. லட்சுமணன்,” ஐதராபாத்தில் நகரில்
தனியார் பள்ளிகள் காளான்கள் போல் பரவிஉள்ளது,
பள்ளிகள் நிர்ணயம் செய்யும் கட்டணமானது
பெற்றொர்களுக்கு பெரும் சுமையாகி உள்ளது. உயர்நிலை
தனியார் பள்ளிகளில் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 4 லட்சம்
வரையில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது,
இது நடுத்தர குடும்ப மக்களுக்கு மிகப்பெரிய
தொகையாகும்.” என்று கூறினார். தெலுங்கு தேசம்
கட்சியின் உறுப்பினர் எஸ் வெங்கட வீரய்யா பேசுகையில்
பல தனியார் பள்ளிகள் ’கவரும்’ விதமாக பெயர்களை
வைத்து உள்ளது, ஆனால் பள்ளிகளில் விளையாட்டு
மைதானம் மற்றும் முக்கியமான வசதிகள் எதுவும்
இல்லை என்று கூறினார். உறுப்பினர்கள் எழுப்பிய
கவலையை தொடர்ந்து அரசு இவ்விவகாரத்தில் சரியான
நடவடிக்கையை எடுப்பதாக உத்தரவாதம் அளித்து
உள்ளது.துணை முதல்-மந்திரி கதியாம் ஸ்ரீஹரி
பேசுகையில், இது தொடர்பாக அரசு விசாரித்து உள்ளது,
பல்வேறு பள்ளிகளிடம் இருந்து பதில்களையும் பெற்று
உள்ளது. பதில்கள் ஆய்வு செய்யப்படும். கல்வி கட்டணம்
தொடர்பான பிரச்சனையில் அரசு ஏற்கனவே உத்தரவிட்டு
உள்ளது, ஆனால் சில பள்ளிகள் அரசின் நடவடிக்கைக்கு
எதிராக கோர்ட்டை நாடிஉள்ளனர் என்று குறிப்பிட்டு
உள்ளார். தனியார் பள்ளிகள் அநியாயக் கட்டணம்
வசூலிக்கப்படுகிறது, கிறம புறங்களில் விவசாயிகள்
தற்கொலை செய்துக் கொள்வதற்கு இது காரணமாகும்
என்று தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்
கிருஷ்ணாய்யா கூறிஉள்ளார். முதல்-மந்திரி சந்திரசேகர
ராவ் பேசுகையில், கல்வித்துறையின் முக்கியத்துவம்
காரணமாக பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒரு தனியான
மற்றும் முழுமையான விவாதமானது அவையில்
இருக்கவேண்டும். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த கல்வி
பெறும் உரிமை சட்டத்தில் குறைபாடுகள்
உள்ளது. இவ்விவகாரத்தில் பல்வேறு மாநில அரசுக்கள்
தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளது, என்று
கூறினார். தனியார் பள்ளிகளில் அதிகமான கட்டணம்
வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நாடு
முழுவதும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.