Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, December 05, 2015

எல் நினோ- வின் விளைவுகள்

நீங்கள் படிக்கப் போகும் இந்தக் கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தினமணி நாளிதழில் வெளிவந்தது. இன்றைக்கும் பொருந்தக்கூடியது..


வழக்கமாக இந்தியத் துணைக் கண்டத்தில்
தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரத்தில்
தொடங்கி செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம்
வரை நீடிக்கும். அதன் பிறகு கொஞ்ச நாள் நல்ல
வெயில் அடித்து விட்டு அக்டோபர்
மத்தியிலிருந்து நவம்பர் இறுதி வரை வடகிழக்குப்
பருவமழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு,
அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே பலத்த மழை
பெய்யத் தொடங்கியது.

தலைநகர் தில்லியில்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு
மிக அதிகமான நாள்களுக்குப் பருவமழை
கொட்டித் தீர்த்தது. குஜராத்தில் ஆறு நாள்கள்
இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
குஜராத்தின் பல பகுதிகளிலும் ராஜஸ்தானின்
தென்பகுதியிலும் பெரும் வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டது. நாட்டின் சில பகுதிகளில் இவ்விதமாக
தென்மேற்குப் பருவமழை நீடிப்பது
ஆண்டுதோறும் வழக்கமாகிவிடும் போல
தோன்றுகிறது. தெற்கு கர்நாடகத்தில் கடந்த
ஏழாண்டுகளில் நான்காவது முறையாக இந்த
ஆண்டில் பருவமழை உரிய காலத்திற்குப் பிறகும்
நீடித்திருக்கிறது.
பருவ மழை, காலம் தவறாது தொடங்கும், காலம்
தவறாது முடியும் என்ற நம்பிக்கையுடன்தான்
விவசாயிகள் தம் விவசாயப் பணித் திட்டங்களை
வகுக்கிறார்கள். பருவமழை நிற்பது தாமதமானால்
பயிர்கள் பாதிக்கப்படும். சில நாள்களுக்காவது
நல்ல வெயில் அடித்தால்தான் வளர்ந்து நிற்கும்
நெற்பயிரில் தானிய மணிகள் உலர்ந்து பசுமை
நிறம் மாறி முழுமையாக முதிர்ந்து முற்றும்.
மழை தொடர்ந்து பெய்து பயிர்கள் ஈரமாக
இருக்கையில் அறுவடை செய்ய வேண்டிய
கட்டாயம் நேரிட்டால் தானிய விளைச்சலின்
அளவும், வைக்கோலின் தரமும் குறையும்.
பயிரை அறுவடை செய்யாமல் விட்டால் பயிரில்
பூச்சித் தாக்குதல் ஏற்பட ஈரம் வழிவகுக்கும்.
மழை பலமாகப் பெய்யுமானால் பயிரிலிருந்து
முதிர்ந்த தானிய மணிகள் உதிரத் தொடங்கி
விடும். 2007ஆம் ஆண்டில், நவம்பர் வரை
பருவமழை நீடித்தபோது கர்நாடகத்தின்
தென்பகுதிகளில் நெல் விளைச்சல் 25 முதல் 40
விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது. 2010 ஆம்
ஆண்டில், இந்தியாவின் மேற்கு கரையில் கேரளம்
முதல் ராஜஸ்தான் வரை தென்மேற்குப்
பருவமழை நவம்பர் மாதம் வரை நீடித்தது.
மகாராஷ்டிரத்தில் 13 லட்சம் ஏக்கர் பயிர்கள்
கடுமையாகப் பாதிக்கப்பட்டன. திராட்சை பயிரிட்ட
பல விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பி
செலுத்த முடியாமல் தற்கொலை செய்து
கொண்டனர். 2011ஆம் ஆண்டிலும் அக்டோபர்
வரை மழை நீடித்து நெற்பயிர்களை
சேதப்படுத்தியது. விவசாயத் தொழிலாளர்கள்
வேலை வாய்ப்பையும் வருமானத்தையும்
இழந்து வாடினர். அதற்கு முந்தைய ஆண்டான
2010ஆம் ஆண்டில் மழைப்பருவம் நீடித்ததால்
பருத்தி பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதன்
காரணமாக, பெண் தொழிலாளர்களின் பிழைப்பு
பாதிக்கப்பட்டது. நீடிக்கும் பருவமழைகள்
தொழிலாளர்களின் வருவாயைக் குறைப்பதுடன்
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடம்
உணவின்மை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை,
தொற்றுநோய் போன்ற தொடர்
விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
கடந்த காலங்களில் "எல் நினோ' அல்லது "லா
நினா' எனப்படும் விளைவுகளின் மேல்
பருவமழைக் கோளாறுகளுக்கான பழியைப்
போடுவது வழக்கம். ஆனால் இந்த முறை
2012ஆம் ஆண்டின் வசந்தகாலத்திற்குப் பிறகு
"எல் நினோ'வோ, "லா நினா'வோ
உருவாகவேயில்லை.

 வானியல் துறை
இந்தியாவில் கோடைப் பருவமழை பெரிய அளவில்
பெய்ததற்கு உலகளாவிய வளிமண்டல
வெப்பநிலை உயர்ந்ததும் மாடன் - ஜூலியன்
காற்றலைவு என்ற விளைவுமே காரணம்
என்றது. அந்தக் காற்றலைவு, பூமியின்
வெப்பமண்டலத்தில் உருவாகி கிழக்குத் திசையில்
வெப்பமண்டல நாடுகளைச் சுற்றி வரும் ஒரு
வட்டக் காற்றோட்டமாகும். அதன் விளைவாக
வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல
நாடுகளில் மழைப்பாங்கு மற்றும் தரைமட்ட
வெப்பநிலைகளில் தாக்கம் ஏற்படும். குஜராத்தில்
பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கும் அதுவே
காரணமாகச் சொல்லப்படுகிறது.
"எல் நினோ' என்பது பசிபிக் பெருங்கடலில் நீண்ட
காலத்திற்கு சராசரி அளவை விட கடல் பரப்பு
வெப்பநிலை அதிகமாயிருப்பதாகும். இந்த உயர்வு
என்பது சுமார் அரை செல்சியஸ் டிகிரி தான்.
ஆனாலும் அதன் காரணமாக ஏற்படும்
உலகளாவிய விளைவுகள் மகத்தானவை. "எல்
நினோ' சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி
சில மாதங்களுக்கு நீடிக்கும். அதன் காரணமாக
இந்தியப் பெருங்கடல், இந்தோனேசியா,
ஆஸ்திரேலியா ஆகிய பரப்புகளில் வளியழுத்தம்
அதிகரிக்கும். தென் அமெரிக்காவுக்கும்,
ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பசிபிக்
கடலின் மையப்பகுதி மற்றும் கிழக்குப்பகுதி,
தஹிட்டி தீவுக்கூட்டம் ஆகிய பரப்புகளில்
வளியழுத்தம் குறையும். தென் பசிபிக்
பகுதிகளில் பருவக்காற்று வலுவிழக்கும் அல்லது
கிழக்கு நோக்கி நகரும். பெரு நாட்டின் அருகில்
வெப்பக்காற்று மேலெழும்பி, அந்நாட்டின்
வடபகுதிகளில் உள்ள பாலைவனங்களில்
மழையை பொழிவிக்கும். இந்தியப் பெருங்கடலில்
இருந்தும், மேற்கு பசிபிக் கடலிலிருந்தும், கிழக்கு
பசிபிக் கடலுக்குச் சூடான கடல்நீர் இடம்
பெயரும். அதன் கூடவே மழையும் இடம்
பெயர்ந்து மேற்கு பசிபிக் பகுதியில் பரவலான
வளர்ச்சியும், கிழக்கு பசிபிக் பகுதியில்
வழக்கத்துக்கு மாறான மழையும் ஏற்படும்.
சூடான கடல் நீர் கிழக்கு நோக்கிப் பாயும். அதன்
காரணமாக, நீர்வாழ் உயிரினங்களுக்குத்
தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்ததும்
குளிர்ச்சியானதுமான நீர் ஆழ்கடல்
பகுதியிலிருந்து மேல் பரப்புக்கு வரமுடியாமல்
தடுக்கப்படும். அதன் காரணமாக மீன் வளம்
குறைந்து, மீன்பிடித் தொழிலும் மீனவர்களின்
வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். "எல் நினோ'
நிகழும் ஆண்டுகளிலும் நடுநிலையான
ஆண்டுகளிலும் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில்
ஜப்பான், கொரியா போன்ற நாடுகளை
வழக்கமாகத் தாக்கும் புயல்களின் எண்ணிக்கை
குறையும். தென் கிழக்கு ஆசியா, வட
ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வறட்சி,
காட்டுத்தீ, காற்றில் தூசிச் செறிவு அதிகரிப்பு,
காற்றின் தூய்மைக்கேடு போன்ற விளைவுகள்
ஏற்படும்.


"எல் நினோ'க்கள் பத்தாயிரம் ஆண்டுகளாகவே,
சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி
வந்திருக்கின்றன. முன்பு கொலம்பியாவிலும்,
பெரு நாட்டிலும் செழித்திருந்த புராதனச்
சமூகங்கள் அழிந்திட அவை காரணமாக இருந்தன.
1789 ஆம் ஆண்டுக்கும் 1793 ஆம் ஆண்டுக்கும்
இடையில் அவை ஐரோப்பாவில் உணவு
உற்பத்தியை கடுமைûயாக பாதித்து பிரான்ஸில்
மக்கள் புரட்சி செய்து முடியாட்சியை
கவிழ்த்ததில் உந்துசக்தியாக அமைந்தன.
1876-77 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளிலும்
அவை கடும் வறட்சியையும் பஞ்சத்தையும்
தோற்றுவித்தன. 1876ஆம் ஆண்டில் சீனாவில்
பஞ்சம் ஏற்பட்டு 13 மில்லியன் மக்கள் மாண்டனர்.
"எல் நினோ'வால் ஏற்படும் வெப்ப நீரோட்டம்
கிறிஸ்துமஸ் பருவத்தில் பெரும்பாலும்
தென்பட்டதால் பெரு நாட்டு மாலுமிகள்
கிறிஸ்துவின் நினைவாக "சிறுவன்' என்று
பொருள்படும் "எல் நினோ' என்று அதைக்
குறிப்பிடத் தொடங்கினர்.


"எல் நினோ'வுக்கு நேர் எதிரான விளைவுகளை
ஏற்படுத்தும் சம்பவம் "லா நினா' எனப்படுகிறது.
அதற்கு "சிறுமி' என்று பொருள். அதன்
காரணமாக நிலநடுக்கோட்டுப் பகுதியில்
மத்தியக்கிழக்கு பசிபிக் கடலின் பரப்பு
வெப்பநிலை வழக்கமானதைவிட 3-5 செல்சியஸ்
டிகிரி குறைந்து விடும். இந்தியாவைப்
பொருத்தவரை எல் நினோ தென்மேற்குப் பருவ
மழையின் போக்கை குலைத்துவிடும். 2009ஆம்
ஆண்டில் இவ்வாறு நிகழ்ந்தது. ஆனால் "லா
நினா' சரியான நேரத்தில் சரியான அளவில் மழை
பெய்ய உதவுகிறது. 2010ஆம் ஆண்டில்
சாதகமான தென்மேற்குப் பருவ மழை
அமைந்ததற்கு பசிபிக்கில் உருவான லா நினா
காரணமாகும். ஆனால், ஆஸ்திரேலியாவின்
குவின்ஸ்லாந்து பகுதியிலும், தென்கிழக்கு
பிரேசிலிலும் இலங்கையிலும் பெரு மழையும்
புயல் காற்றுகளும் கோர தாண்டவமாடியதற்கும்
"லா நினா' காரணமாயிற்று.
2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வட
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசவும் அதன்
மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு
மாகாணங்களில் கடும் டோர்னடோக்கள்
உருவாகவும் "லா நினா' விளைவு
காரணமென்கிறார்கள். டெக்சாஸ், ஓக்லஹாமா,
அர்க்கன் சாஸ் ஆகிய மாநிலங்களில் வறட்சி
ஏற்பட்டதும் அதன் காரணமாகவே. 2011ஆம்
ஆண்டில் "லா நினா' காரணமாக உலகளாவிய
வளிமண்டல வெப்பநிலை சற்றே குறைந்தது.
ஆனால் பூமிப் பரப்பு வெப்பநிலை சற்றே
உயர்ந்திருந்தது. சராசரி மழை அளவும்
கூடுதலாயிருந்தது. ஆனால், கிழக்கு
ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் மழைப் பருவம்
முன்னதாகத் தொடங்கி தாமதமாக முடிவது
இனிவரும் பல ஆண்டுகளுக்கும் தொடரும் என
சர்வதேச வானிலைக் கண்காணிப்பு ஆய்வறிக்கை
கூறுகிறது. அதற்குக் காரணம், உலகளாவிய வளி
மண்டல வெப்பநிலை உயர்ந்து வருவதே. கடல்
பரப்பிலிருந்து அதிக அளவு நீராவி, நிலப்பரப்புக்கு
இடம் பெயர்ந்து மழைப் பொழிவு அதிகமாகிறது.
இது எல்லா ஆண்டுகளிலும் ஏற்படாமல்
போகலாம். ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்கு ஒரு
முறையாவது இந்த விளைவு அதிகமான
தீவிரத்துடன் நிகழும். அதற்கேற்ற வகையில்
விவசாயிகள் தங்களின் சாகுபடி கால
அட்டவணையை மாற்றியமைத்துக் கொள்ளவும்,
மழை நீரைச் சேமித்துத் தேக்கி வைத்துக்
கொள்ளவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
Thanks: dinamani 29-11-2013