Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, March 19, 2016

மாணவர்கள் சோர்வடைந்துவிடக்கூடாது!-தினத்தந்தி தலையங்கம்

‘‘கற்றல் நன்றே, கற்றல் நன்றே பிச்சை புகினும் கற்றல்
நன்றே’’ என்ற முதுமொழி காலம்காலமாக தமிழ்நாட்டில்
கல்வியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் வகையில்
அமைந்துள்ளது. இந்த முதுமொழிதான் இப்போது
தமிழ்நாட்டில் வாழ்க்கை முறையாக இருக்கிறது.
எவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பங்கள் என்றாலும் சரி,
வறுமையின் கடைக்கோடியில் இருந்தாலும் சரி, தங்கள்
பிள்ளைகள் தங்களைப்போல கஷ்டப்படக்கூடாது என்ற
உணர்வில் பிள்ளைகளை பெற்றோர் படிக்கவைக்கிறார்கள்.
எந்த ஒரு கல்வி என்றாலும், அவர்களின் அறிவை,
ஆற்றலை மதிப்பிடுவது தேர்வுதான். அதிலும் பிளஸ்–2
தேர்வு என்பது மாணவர்களின் எதிர்கால வாழ்வு எந்த
வழியில் செல்லவேண்டும் என்று காட்டும் வழிகாட்டி
போன்றதாகும். பள்ளிக்கூட வாழ்க்கையின் இறுதி இது.
அதற்குப்பின் கல்லூரி வாழ்க்கை, அல்லது
வேலைவாய்ப்பு என்ற நிலையில், பிளஸ்–2 தேர்வில் அதிக
மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பது ஒவ்வொரு
மாணவனின் குறிக்கோள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் லட்சியமும் ஆகும்.
பிளஸ்–2 தேர்வை பொறுத்தமட்டில், மத்திய செகண்டரி
கல்வி வாரியம் அதாவது, சி.பி.எஸ்.இ. நடத்தும்
தேர்வுகளும் இருக்கிறது. மாநில கல்வித்துறை நடத்தும்
தேர்வும் இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் லட்சியக்கனவு ஐ.ஐ.டி., இதற்கு
முக்கியத்தேவை கணக்குப்பாடம். இந்த ஆண்டு
சி.பி.எஸ்.இ. கணக்குப்பாட தேர்வு வினாக்கள்
வடமாநிலங்களில் ‘லீக்’ ஆகிவிட்டது என்று ஒருபுறம்
புகார் இருக்க, பொதுவாக தேர்வில் கேட்கப்பட்ட
கேள்விகள் எல்லாம் மிகவும் கடினமாக இருந்தது,
மாணவர்களால் பதிலளிக்க முடியாத அளவு கஷ்டமாக
இருந்தது என்று வந்த புகார், பாராளுமன்றம்வரை
எதிரொலித்தது. இதன் அடிப்படையில், இந்த
தேர்வுத்தாள்களை திருத்தும் முன்பு, தீர்வு காணும்
நடவடிக்கை எடுப்பதற்காக நிபுணர்குழு அமைக்கப்படும்
என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துவிட்டது.
இதேபோல, தமிழ்நாட்டில் பிளஸ்–2 ‘கெமிஸ்ட்ரி’ என்று
சொல்லப்படும் வேதியியல் தேர்வில் மிகவும் கடினமாக
கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய
குறைந்தபட்ச தேர்ச்சி கையேட்டிலிருந்து ஒரு கேள்விகூட
கேட்கப்படவில்லை. பாடங்களின் பின்பகுதியில் உள்ள
மாதிரி வினாக்களிலிருந்து பொதுவாக நிறையகேள்விகள்
கேட்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அப்படி
கேட்கப்படவில்லை. ஒரு கேள்விக்குரிய விடை
பாடப்புத்தகத்திலேயே இல்லை என்றும் குறை
கூறப்படுகிறது. எனவே, எங்களுக்கு மதிப்பெண்
குறைவாக கிடைக்கும், இதனால் தொழில் கல்விகளில்
மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற தொழில்
கல்லூரிகளில் சேர்வதற்கான அடிப்படை ‘கட் ஆப்’
மார்க்குகளில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது
மாணவர்களின் பெரிய குறையாக இருக்கிறது. வேதியியல்
பாடத்தேர்வில் சரியாக பதிலளிக்கவில்லையே என்ற
மனஏக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு
மாணவியும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாணவியும்
தற்கொலை செய்துகொண்டனர். பெரும்பாலான
மாணவர்கள் தங்களுக்கு வேதியியல் பாடத்தில் மறுதேர்வு
வேண்டும், அல்லது கருணை மதிப்பெண்கள்
வழங்கப்படவேண்டும், அல்லது தேர்வுத்தாள்களை
திருத்துவதில் சற்று தாராளமாக இருக்கவேண்டும் என்பது
போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. போல, தமிழக கல்வித்துறையும்,
மாணவர்கள், பெற்றோர்களின் இந்த கோரிக்கையை ஏற்று,
இந்த பிரச்சினையின் தன்மையை ஆராய்ந்து ஒரு தீர்வு
காண்பதற்காக, நிபுணர்குழுவை அமைக்கவேண்டும்.
மாணவர்களும் இந்த வேதியியல் பாடவினா கடினமாக
இருப்பதை வைத்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
பொதுவாக, மாதிரி வினாக்களையோ, இதுபோல கற்றல்
கையேடுகளையோ ஒரு வழிகாட்டியாகத்தான்
பயன்படுத்தவேண்டுமே தவிர, அதை மட்டுமே
படித்தால்போதும் என்ற உணர்வை
வளர்த்துக்கொள்ளக்கூடாது. கொடுக்கப்பட்டுள்ள
பாடப்புத்தகங்கள் முழுமையையும் நன்றாக படித்தால்,
எந்த கேள்வி கேட்கப்போகிறார்களோ? என்ற பயத்தை
விட்டுவிட்டு, எந்த கேள்வியை கேட்டாலும், என்னால்
பதிலளிக்க முடியும் என்ற துணிவான நம்பிக்கையை
பெறமுடியும். ஆசிரியர்களும், மாணவர்கள்
பாடப்புத்தகங்கள் முழுவதையும் நன்றாக
அறிந்துகொள்ளும் வகையில் கற்றுக்கொடுத்து,
அதைப்படிப்பதையே ஊக்குவிக்கவேண்டும்.