மும்பை, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு கணக்குப்பதிவியல் வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மிராரோட்டில் வினாத்தாளுடன் வந்த ஒரு மாணவர் பிடிபட்டு உள்ளார்.‘வாட்ஸ்அப்’பில் பரவியது மராட்டிய மாநிலத்தில் தற்போது 12 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று முன்தினம் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக சமூக வலைதளமான ‘வாட்ஸ்அப்’பில் கணக்குப்பதிவியல் வினாத்தாள் பரவியது. இதுகுறித்து உடனடியாக மும்பை கல்வி மண்டலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை கல்வி மண்டல அதிகாரிகள் தேர்வறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும், வலைதளத்தில் பரவிய வினாத்தாளும் ஒன்றுதானா என்பதை சரிபார்த்தனர். அப்போது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில் பரவி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.போலீசில் புகார் இதுகுறித்து மும்பை கல்வி மண்டல தலைவர் தத்தாரே ஜகதாப் கூறும்போது:–தேர்வு தொடங்கிய சில நிமிடங்களுக்கு முன் தான் வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில் பரவி உள்ளது. எனவே இதை பெரியதாக எடுத்து கொள்ளவேண்டாம். எனினும் இந்த விவகாரம் குறித்து சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.பதற்றமடைய வேண்டாம் மும்பை கல்வி மண்டல செயலாளர் சித்தேஷ்வர் கூறியதாவது:– வினாத்தாள் கட்டுகள் காலை 10.30 மணிக்கு தான் தேர்வு மையங்களில் பிரிக்கப்படும். எனவே காலை 10.30 மணிக்கு பிறகு தான் வினாத்தாள் வெளியாகி உள்ளது. எனவே மறுதேர்வு நடத்த வேண்டிய அளவிற்கு இது பெரிய விவகாரமில்லை. எனினும் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை முடிந்த பிறகே இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே இந்த விவகாரம் குறித்து மாணவர்கள் பதற்றம் அடைய வேண்டாம். வர இருக்கும் தேர்வுகளை நிதானமாக சந்திக்கவேண்டும் என்றார்.மாணவர் பிடிபட்டார் இந்தநிலையில் ‘வாட்ஸ்அப்’பில் வெளியான வினாத்தாளுடன் மிராரோட்டில் உள்ள தேர்வு மையத்தில் மாணவர் ஒருவர் பிடிபட்டார். அந்த மாணவர் குறித்து காசிமீரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த மாணவனை பிடித்து அவருக்கு எப்படி வினாத்தாள் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கடந்த ஆண்டும் 12 வகுப்பு பொது தேர்வு கணக்கு பதிவியல் வினாத்தாள் தேர்வு தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் ‘வாட்ஸ்அப்’பில் பரவியது குறிப்பிடத்தக்கது.