Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, December 15, 2015

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?



நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?
டாக்டர் பெரு. மதியழகன்
விரிவாக்கத்துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி
நாமக்கல்
இந்த ‘அறிவு யுகத்தில்’ ஒருவரின் ஒப்பரிய செல்வமே ‘நினைவாற்றல்தான்’. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் எதைச் சாதிப்பதற்கும் நினைவாற்றல் வேண்டும். நமது அறிவின் அளவு கோல் நினைவாற்றலே. எவ்வளவு செய்திகளை நம் நினைவில் சேமித்து வைக்க முடியும்? என்று சிலர் கேட்பதுண்டு. நமது மூளை கணினித் தட்டுகளைப் போல (Computer Hard Disk) எவ்வளவு செய்திகளையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் திறனுள்ளது. கணினியின் தட்டுகளுக்குக் கூட ஓர் அளவுண்டு. ஆனால் நமது மனத்தின் சேமிப்பாற்றலுக்குக் எல்லையே இல்லை. வானமே எல்லைÐ நீங்கள் விரும்பினால், முயற்சித்தால் உங்களாலும் முடியும்.
நினைவு வங்கி
நமது நினைவாற்றலுக்கு முதன்மையான காரணமாக இருப்பது மூளையாகும். மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் போன்ற பகுதிகள் இருந்தாலும், பெருமூளையின் பொட்டுப்பிரிவே நினைவாற்றலின் சேமிப்பு வங்கியாக விளங்குகிறது. நீங்கள் பலரைப் பார்த்திருக்கக்கூடும். ஆம்Ð சட்டென்று நினைவுக்கு வரவில்லை என்றால் சுட்டுவிரலால் அவர்களின் பொட்டுப்பகுதியை தட்டுவார்கள்

நினைவாற்றல் மேதைகள்
இராமநாதபுரம் சேதுபதி அரசவையில் இருந்த மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அந்தக்கவி வீரராகவ முதலியார், பேரையூர் மீனாட்சி சுந்தரக்கவிராயர், திருக்குறள் பெ. இராமையா, தேவநேயப் பாவாணர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், சிலம்பொலி சு. செல்லப்பன், கிருபானந்த வாரியார் போன்ற தமிழறிஞர்கள் நினைவாற்றல் மிக்க மேதைகள் இந்தியாவின் விவேகானந்தரும், இங்கிலாந்தில் தோன்றிய ‘மெக்காலே’வும் மிகச்சிறந்த நினைவாற்றல் பெற்றவர்கள்.
நினைவாற்றலுக்கு அடிப்படைகள்
நினைவாற்றல் என்பது ஒருவர் தன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வாயிலாகப் பார்த்து, படித்து, கேட்டு, நுகர்ந்து, உணர்ந்து சுவைத்து அறிந்த அனுபவங்கள் பலவற்றையும் மனத்தில் பதியவைத்து வேண்டியபோது அதை நினைவில் கொண்டுவரும் ஆற்றலே நினைவாற்றலாகும். அனுபவங்கள் மூளையில் இலேசான பதிவை உண்டாக்குவதும், ஆழமான பதிலை உண்டாக்குவதும் அவரவர்கள் மேற்கொள்ளும் முயற்சி காட்டும் ஆர்வம், மனநிலை சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பொருத்து இருக்கிறது.
நினைவாற்றலுக்கு அடிப்படைகள் நான்கு நிலைகளாகும். கற்றல் அல்லது அறிதல் (Learning). கற்றல் என்பது நமக்குத் தெரியாத ஒன்றை அறிந்துகொள்வது. ஐம்புலன்களில் ஒன்றின் மூலமோ அல்லது ஒரே நேரத்தில் பார்த்தல், கேட்டல் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட புலன்கள் மூலமோ அறிதல் நிகழலாம். கற்றலில் ஒரு புலன் வழியாக மூளையில் ஏற்படும் பதிவைவிட ஒன்றுக்கு மேற்பட்ட புலன்கள் ஈடுபடும்போது நினைவில் நன்கு பதியும். ஒன்றைப் படிக்கும் போது மனத்தில் பதிவதைவிட ஆசிரியர் ஒருமுறை சொல்லக்கேட்டு பிறகு அதையே அவர் கரும்பலகையில் எழுதிக் காட்டுகிறபோது நன்கு பதியும். படித்ததை செயல்முறை வகுப்பில் செய்து பார்க்கும்போது மேலும் நன்கு பதிந்துவிடுகிறது.
இங்கு முதலில் ஆசிரியர் சொல்லக் கேட்டபோது செவியும் பிறகு அவர் கரும்பலகையில் படம் வரைந்து எழுதி விளக்கியபோது கண்ணும், காதும் ஆகிய புலன்கள் மூலம் கற்றல் நிகழ்ந்தது. அதையே செய்து பார்த்தபோது, பார்த்தல், கேட்டல், உணர்தல் ஆகிய புலன்கள் மூலம் அறிதல் நிகழ்ந்தது.
ஒருவர் ஒன்றைப் படித்தால் 10 முதல் 15 விழுக்காடும், கேட்டால் 20 – 25 விழுக்காடும், அதையே பார்த்து அறிந்தால் 30 – 35 விழுக்காடும் நினைவில் நிற்கும். ஒன்றைப் பார்த்தலுடன் கேட்டும் அறிகிற போது 50க்கும் மேற்பட்ட விழுக்காடு நினைவில் நிற்கும். ஒருவர் எல்லாப் புலன்களும் பங்கேற்கும் வகையில் ஈடுபாடுடன் கற்றால் 90 விழுக்காடும் நினைவில் நிற்கும்.
நினைவில் நிறுத்தல் (Retention) அறிதல் என்பது முதல்நிலை. அறிந்ததை நினைவில் நிறுத்தி வைத்தல் அடுத்த நிலை. நினைவில் நிறுத்தி வைக்காத எதுவும் படித்ததன் பயனைத் தராது. “மூவாறு பதினெட்டு” என்பதை நினைவில் நிறுத்தி வைத்திருந்தால்தான் மாணவன் தேர்வெழுதும்போதும், அதிகாரி திட்டம்போடும்போதும், முதலாளி கூலி கொடுக்கும்போதும், வியாபாரி விலை சொல்லும்போதும், விற்பனை செய்யும்போதும், விரைவாகவும், சரியாகவும் செய்ய முடியும். எனவே நினைவில் நிறுத்தல் என்பது நினைவாற்றலுக்கு மிகவும் இன்றியமையாதது.
மீட்டழைத்தல் (Recall)
கற்றறிந்த ஒன்றை நினைவில் நிறுத்தி வைக்க, மூளையில் பதிந்துள்ளதை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுதான் மீட்டழைத்தலாகும். பல மணிநேரம் படித்ததை சில நிமிடங்களில் மீட்டழைத்து மனக்கண்முன் காணமுடியும்.
மீட்டறிதல் (Recognition)
மூளையில் பதிந்திருப்பதை மீட்டழைத்து நான் படித்தது இதுதான், நேற்று பார்த்தது இதுதான், முந்தியநாள் வந்தவர் இவர்தான், இப்பது அதுதான் இது எனத் தீர்மானமாக உணர்வதைத்தான் மீட்டறிதல் எனப்படும்.
எப்படிப்பட்டது
கற்றறிதல், நினைவில் நிறுத்துதல், மீட்டழைத்தல், மீட்டறிதல் இவையனைத்தும் நினைவாற்றலின் அடிப்படைகள் என்று பார்த்தோம். பொதுவாக இன்றைய இளைய சமுதாயமாகிய மாணவச் சமுதாயம் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் படிக்கும்போது (படித்ததை நினைவில் கொள்ள) எத்தகைய வழிகளைக் கையாளலாம்.
‘கற்க கசடற’ என்றார் வள்ளுவர். படிப்பதை சரியாகப் பொருள்புரிந்து படிக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் உடன் பயிலும் மற்ற நபர்களுடன் சேர்ந்து படிப்பது மிக்க பயன்தரும். வகுப்பில் கவனிக்காமல் விட்டதை, புரியாமல் போனதை நண்பரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒருவர் படிக்க மற்றவர் அமைதியாக கண்களை மூடிக்கொண்டு கேட்டால் மனத்தில் நன்கு பதியும். புரியாததும் புரிந்து தெளிவு பிறக்கும்.
‘காலையில் படி, மாலையில் படி
கடும்பகல்படி
மாலை இரவும் பொருள்படும்படிÐÐ
கற்பவை கற்கும்படி வள்ளுவர்
சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிÐÐÐ
என்று பாவேந்தர் வள்ளுவர் சொன்னதை வழிமொழிந்து எப்படி படிக்க வேண்டும் என்றும் எப்போதெல்லாம் படிக்கலாம் என்றும் பாடியுள்ளார்.
காலையில் படி, மாலையில் படி, கடும்பகல் படி என்று அவர் கூறுவதிலும், அரியபொருள் இருக்கிறது. உளவியல் அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவுபடி ஒவ்வொருவருக்கும் உச்ச சக்திநேரம் (Peak Energy Hours) என்று உண்டு. சிலருக்கு காலை நேரத்திலும், சிலருக்கு மாலையிலும், சிலருக்கு இரவிலும் இந்த உச்ச சக்திநேரம் இருக்கும். பேரறிஞர் அண்ணா அவர்கள் இரவில்தான் மிகுதியாக படிப்பதையும், எழுதுவதையும் செய்வார். ஒரே இரவில் ஓர் இரவு திரைப்படத்திற்கு வசனம் எழுதி முடித்தார். அவருக்கு உச்சசக்தி நேரம் இரவு வேளையாக இருந்திருக்கலாம். பலர் காலையிலே எழுந்து படிப்பதும், எழுதுவதும் செய்வார்கள். பாரதிகூட “காலை எழுந்தவுடன் படிப்பு” என்றார். அதாவது நீங்கள் குறைந்த நேரத்தில் மிகுதியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் கவனம் முழுவதும் அந்தப் பணியில் ஒருப்பட்டிருக்கும். அதுவே உங்கள் உச்ச சக்திநேரம்.
மேலும் கற்றது நன்கு மனத்தில் பதிய திரும்பத் திரும்ப பயிலுதல் நல்லது. திரும்பத்திரும்ப என்றால் ஒரே நேரத்திலா அல்லது இடைவெளிவிட்டா என்கிற ஐயம் எழக்கூடும். சான்றாக, ஒரு கட்டுரையை ஒரு மாணவருக்கு பத்துமுறை படித்தால்தான் மனத்தில் பதியும் என்றால் அவர் அதை ஒரே மூச்சாகப் பத்து முறைப் படிப்பதைவிட இன்று ஐந்துமுறை நாளை மூன்று முறை அடுத்தநாள் இரண்டு முறை என்று படித்து மனப்பாடம் செய்வதே நன்கு நினைவில் நிற்கும்.
மனப்பாடம் செய்ய வேண்டியது மிக நீண்டப்பகுதியாக இருந்தால் அதை பொருள் தொடர்புள்ளச் சிறுசிறு பத்திகளாகப் பிரித்துக்கொண்டு முதலில் முதல் பத்தியை மனப்பாடம் செய்ய வேண்டும். பிறகு இரண்டாவது பத்தியும் அடுத்து முதல் இரண்டு பத்திகளுடன் அடுத்த பத்தியைச் சேர்த்தும் மனப்பாடம் செய்ய வேண்டும். நீண்ட பகுதியை மனப்பாடம் செய்ய இது மிகவும் ஏற்றமுறை என உளவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
திரும்பத்திரும்பப் படிப்பது, இடைவெளிவிட்டு படிப்பது என்றால் பத்துமுறையும் பார்த்தே படிப்பதா? என்கிற கேள்வி எழலாம். இரண்டு மூன்று முறைப் பார்த்துப் படித்துவிட்டு பிறகு சொல்லிபார்ப்பதே சிறந்த பயிற்சியாகும். இடையில் தெரியாத இடத்தில் ஏட்டைப் புரட்டிப் பார்த்துப் பின்பு தொடரலாம். பார்க்காமல் சொல்லிப் பார்த்ததையே பிறகு எழுதிப் பார்த்தால் தன்னம்பிக்கை மிகும். பிறகு துணிவுடன் தேர்வு பயமின்றி தேர்வை எதிர்கொள்ளலாம்.
(தொடரும்)
ஆசிரியரின் டைரி குறிப்பு
உயர்ந்த நிலை
நாம் உயர்ந்த நின்றால் உயர்ந்த நிலையில் இருந்தால் பலர் வலிய வந்து பேசுவார்கள். நாம் தாழ்ந்து போனால் வலியச் சென்று பேசினாலும் விலகிப்போவார்கள்.
இயற்கை
இயற்கை பசுமை போர்க்கும்போது இதயங்களும் துன்ப இலைகளை உதரவிட்டுத் துளிர்விடத் தொடங்குகின்றன.
உண்மை மனிதன்
உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற மனிதர்கள் பிறருடைய விருப்பு வெறுப்புகளைக் கண்டு வருந்திப் பயனில்லை.
எல்லோருக்கும் நல்லவர்
யாரையும் மனம் வருந்தாமல் நடத்தவேண்டும் என்று விரும்பினாலும் அப்படி நடத்த முடிவதில்லை. தவறு செய்கின்றவர்களைக் கண்டித்துத்தானே ஆக வேண்டும். அவர்கள் மனம் வருந்துவார்கள் என்பதற்காக விட்டுவிட்டால் பெரிய பெரிய தவறுகள் அல்லவா வந்து சேரும். எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது.
எப்போது துன்பம் உணர்கிறோம்?
நியாயமானவைகள் நடைபெறாவிட்டால் கோபம் வருகிறது. கொதிப்படைகிறோம், துன்பம் அடைகிறோம்.
அவசரம்
மிக விரைவிலேயே எல்லாவற்றையும் அடைந்துவிட வேண்டும் என்ற வெறியினால் வாழ்க்கையைப் பலபேர் இழந்துவிடுகிறார்கள்.
ஆசை
பலர் பதவிக்காகவும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் துடிக்கிறார்கள். அவற்றிற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விடுகிறார்கள்.
அறம்
அடிப்படை அற உணர்வு செத்துக்கொண்டே வருகிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. வெளி உலகத்துக்கு நல்லவர்கள் என்று கருதப்படுகின்ற பலர் உள்ளுக்குள் கொடியவர்களைவிட மோசமானவர்களைவிட மோசமானவர்களாக இருக்கிறார்கள். வேர் இல்லாத மரத்தில் பசுமையான இலைகள் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?



Author: