அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ்
படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் பிளஸ் டூ
மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ
நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ்
படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுத
வேண்டியதில்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின்
அடிப்படையில் இந்த மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள்
சேர்க்கப்படுகிறார்கள். காஷ்மீர், ஆந்திரப்பிரதேசம்,
தெலங்கானா ஆகிய மாநிலங்கள் நீங்கலாக மற்ற
மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில்,
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 15 சதவீத
இடங்களைப் பூர்த்தி செய்ய அகில இந்திய மருத்துவ, பல்
மருத்துவ நுழைவுத் தேர்வு (AIPMT) நடத்தப்படுகிறது.
மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) இத்தேர்வை
நடத்துகிறது.
ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்,
மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட சில
மாநிலங்களும் ராணுவ மருத்துவக் கல்லூரி, பனாரஸ்
ஹிந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி
நிறுவனங்களும் இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வின்
அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கின்றன.