சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி29 ராக்கெட் புதன்கிழமை மாலை 6 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்
இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில்
நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலை 6
செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டன.
சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி29 ரக
ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு
செய்தது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுன்ட் டவுன்
திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.
பிஎஸ்எல்வி சி29 ராக்கெட், திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணியளவில் விண்ணில்
ஏவப்பட்டது. இதில் அனுப்பப்படும் 6 செயற்கைக்கோள்களும் 550 கி.மீ. தொலைவில்
புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்த வெற்றித் தகவலை, இஸ்ரோ தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் உடனடியாக வெளியிட்டது.
6 செயற்கைக்கோள்களில் ‘டெலியோஸ்-1’ (TeLEOS-1) என்பதுதான் முதன்மை
செயற்கைக்கோள். 400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தொலைஉணர்வு
பயன்பாட்டுக்கானது. மற்ற 5 செயற்கைக்கோள்களில் 2 சிறியவை (மைக்ரோ
சாட்டிலைட்), 3 மிகச்சிறியவை (நானோ சாட்டிலைட்) ஆகும்.