Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, December 18, 2015

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு தேதியில் மாற்றமில்லை

சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை, தள்ளி வைக்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோள், ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
அதனால், திட்டமிட்டபடி, 18ம் தேதி, தமிழகம் உட்பட, நாடு முழுவதும் தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில், வரலாறு காணாத அளவுக்கு கன மழை பெய்து, வெள்ள சேதங்கள் ஏற்பட்டதால், வரும், 18ம் தேதி முதல் நடைபெற உள்ள, சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா உட்பட, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்; பார்லிமென்டிலும், இது தொடர்பாக தமிழக எம்.பி.,க்கள் பேசினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியில் நேற்று, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மாநில முதல்வர்கள், ஒரு பிரச்னை குறித்து, மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை தொடர்பு கொள்வதே வழக்கம். ஆனால், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என, யார் தமிழக முதல்வராக இருந்தாலும், எந்தவொரு விஷயத்திற்கும், குறிப்பிட்ட மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதாமல், பிரதமருக்கே கடிதம் எழுது கின்றனர்.
முதல்வரின் கடிதம், டில்லி தமிழ்நாடு இல்லம் வந்து, அங்கிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வருவதே நடைமுறை. பிரதமருக்கு வரும் கடிதம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; அதை, பிரதமர் அலுவலகமே கையாளும். பிரதமரின் ஒப்புதல் இல்லாமல், அந்த கடிதத்தை சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பிவிட முடியாது.
எனவே, பிரதமரின் கருத்தை அறிந்த பிறகே, அந்தக் கடிதங்கள் மீது, அமைச்சர்கள் முடிவெடுக்க முடியும். முதல்வர் - -பிரதமர் இடையேயான கடித போக்குவரத்தில், இவ்வளவு நடைமுறைகள் இருப்பதால், முதல்வரின் கடிதம், உள்துறை அமைச்சருக்கு வந்து சேராமல் காலதாமதம் ஆகியிருக்கலாம்; ஆனாலும், தற்போது அது பிரச்னை அல்ல.
சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை நடத்தும், யு.பி.எஸ்.சி., அமைப்போடு, மத்திய அரசு உயரதிகாரிகள், ஆலோசனை நடத்திய போது, தமிழகத்தின் கோரிக்கையை ஏற்பதில் சிரமம் உள்ளதை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இப்பிரச்னை தொடர்பாக, யு.பி.எஸ்.சி., தலைவரை, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி., ஒருவர் நேரிலும் சந்தித்து பேசினார்.
அவரிடம், தேர்வுகளை, தள்ளி வைக்க இயலாது என, வெளிப்படையாகவே யு.பி.எஸ்.சி., தலைவர் கூறிவிட்டார். மேலும், வழக்கமான பள்ளி, கல்லுாரி தேர்வுகளைப் போன்றதல்ல இந்த தேர்வு. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கிறவர்கள், ஆண்டு முழுவதும் பல மாதங்களாக படித்து, தங்களை தயார்படுத்தி இருப்பர். மழை, வெள்ள பாதிப்பு என்பது, வெறும் ஓரிரு வாரங்கள் மட்டுமே.
அதனால், எப்போதோ திட்டமிட்டு, வழக்கமாக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை, தள்ளி வைத்துவிட முடியாது. மேலும், தமிழகத்துக்கு என, தனியாக தேர்வுகளை நடத்தவும் முடியாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.