தர்மபுரி அரசு பள்ளி மாணவ, மாணவியர், மாநில அளவில் மதிப்பெண் பெறவும், கட்-ஆப் மதிப்பெண் பெறும் வகையிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தேர்ச்சி
சதவீதத்தில் பின் தங்கியிருந்த தர்மபுரி மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆனாலும், அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மாநில அளவிலான இடங்களை பெற முடியாத
நிலை தொடர்கிறது. கட்-ஆப் மதிப்பெண் பெற்று, மருத்துவம், இன்ஜினியரிங் கல்லூரி, அரசு வேளாண்மை கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இதை போக்கும்
வகையில், இந்தாண்டு முதல் தமிழகத்தில் முன்
மாதிரியாக, தர்மபுரி மாவட்டத்தில் கல்வியில் பின்
தங்கியுள்ள பகுதிகளில் உள்ள நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி
கூறியதாவது:
பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பின் தங்கிய பகுதியில், நன்கு படிக்க கூடிய மாணவ, மாணவிகள்,
தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மாநில அளவிலும், கட்-ஆப் மார்க்
பெறும் வகையிலும், பயிற்சி அளிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பத்தாம் வகுப்பில், 1,480 மாணவ, மாணவியரும், பிளஸ் 2 வில், 1,110 மாணவ, மாணவியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, 80 பாட வல்லுனர்கள் மூலம் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் மொபைல்போன் எண்கள், பயிற்சி பெறும் மாணவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் குறிப்பிட்ட
நேரத்தில் அவர்களை தொடர்பு கொண்டு, பாடங்கள் குறித்த தங்களது
சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். மேலும், வாரத்தில் சனி, ஞாயிற்று கிழமைகளில், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ்
வழங்கவும், பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கு
மதிப்பூதியம் வழங்கவும், மாநில சமச்சீர் நிதியில் இருந்து,
62.13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.