மீலாது நபி டிசம்பர் 24-ஆம் தேதி வருவதையொட்டி,
அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது என்று
தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
மிலாது நபியை ஒட்டி, அரசு விடுமுறை டிசம்பர் 23-ஆம்
தேதி விடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம்
தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம்
தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என
தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன்
முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து,
அரசு விடுமுறை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி
உத்தரவிட்டுள்ளது என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
4 நாள்கள் தொடர் விடுமுறை: டிசம்பர் 24-ஆம் தேதி
விடுமுறை என்பதால், அரசு ஊழியர்களுக்கு
தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸும், 26, 27
ஆகிய நாள்கள் சனி, ஞாயிறு என்பதால் மொத்தம் 4
நாள்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
வங்கிகளுக்கும் விடுமுறை: ஒவ்வொரு மாதமும் 2-
ஆவது, 4-ஆவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு
விடுமுறையாகும். மேலும், அரசு விடுமுறை
வங்கிகளுக்கும் பொருந்தும்.
எனவே, வங்கிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை
விடப்படுகிறது. ஆகவே, இந்த வாரமே வங்கிகள்,
ஏ.டி.எம்.-களில் இருந்து தேவையான பணத்தை எடுத்து
வைத்துக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள்
அறிவுறுத்தினர்.